கோவிஷீல்ட்டை அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற நர்ஸ் சஸ்பெண்ட்…
அரசு மருத்துவமனையில் இருந்து செவிலியர் ஒருவர் கோவிஷீல்டு மருந்துகளை எடுத்துச் சென்றுள்ள சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி, கரூரில் உள்ள தாய்-சேய் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, யாருக்கும் தெரியாமல், ஒரு பாக்ஸ் கோவிஷீல்டு மருந்தை எடுத்து சென்று விட்டார்.
பின்னர், தமது வீட்டைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவர் தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போடுவதற்கான நடைமுறைகள் எதுவும் பின்பற்றாமல், சட்டவிரோதமாக தனலட்சுமி தடுப்பூசி போட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், சுகாதார துறை அதிகாரிகள், தனலட்சுமி வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது தனலட்சுமி வீட்டில் இருந்து தடுப்பூசி மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து பேசிய தனலட்சுமி, உறவினர்களுக்கு செலுத்துவதற்காக தடுப்பூசி எடுத்து வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து செவிலியர் தனலட்சுமி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தடுப்புசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், செவிலியர் ஒருவர் தடுப்பூசி மருந்துகளை எடுத்துச் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
