அரசியல்

அதிமுக மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை… எடப்பாடி பழனிசாமி பேட்டி…

அதிமுக கட்டுக்கோப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் என்றும் அதிமுக மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அவர்களுடன், தளவாள் சுந்தரம், தம்பிதுரை, ரவிந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை தேர்தலில அதிமுகக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார்.

தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு வலியுறுத்தியதாகவும், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும் தமிழகத்தின் 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டிருக்கின்றன. எனவே மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று தெரிவித்ததாக கூறினார். நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் உள்ளது. அதை போக்குவதற்காக, கோதாவரி – காவிரி நதிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்திவும் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். அதிமுக கட்டுக்கோப்பாக இயங்கி கொண்டிருக்கும் இயக்கம் என்றும், கட்சி தலைமை மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை என்றார். லாட்டரி சீட்டுக்களை தமிழகத்தில் கொணடு வர திமுக அரசு திட்டமிட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையிலேயே அறிக்கை வெளியிட்டதாகவும் திமுக அரசு லாட்டரி சீட்டை கொண்டு வராவிட்டால் நல்லதுதான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.