தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது…
இந்து மதம் மற்றும் அரசியல் தலைவர்களைப் பற்றி அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, மதுரையில் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கிறிஸ்துவ ஆலயத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதைக் கண்டித்து, அருமணையில் கடந்த 18 ஆம் தேதி கண்டன பொதுக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டு பேசினார்.
திமுக நாங்கள் போட்ட பிச்சை என்றும், கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்றும் துடி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது என்றார். மேலும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களையும் ஜார்ஜ் பொன்னையா முகம் சுளிக்கும் வகையிலான வார்த்தைகளால் விமர்சித்தார்.

இந்த நிலையில், சாதி – மத மோதலைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையா கைது செய்ய வேண்டும் என்று பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட தரப்பினர் புகாரளித்தனர். பல இடங்களில் போராட்டங்கள் நடத்த பாஜக மற்றம் இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜார்ஜ் பொன்னையா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நான் பேசியது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றும், இந்து சகோதர சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால், வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளை தர்விர்ப்போம் என்றும் அதில் கூறியுள்ளார். இதனிடையே அருமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பாதிரியார் கடல் வழியாக படகில் தப்பி விட்டதாகவும், முன்ஜாமீன் கிடைத்த பின்னரே ஊருக்கு திரும்புவதாகவும் தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், தலைமறைவான ஜார்ஜ் பொன்னையா, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் போலீசார் கைது செய்துள்ளனர்.
