தமிழ்நாடு

தேர்தலுக்கு முன் அவசரமாக போடப்பட்ட சாலை ஒப்பந்தங்கள் ரத்து… சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை…

சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு, அவசர அவசரமாக இறுதி செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். குறிப்பிடப்பட்ட சாலைகள் நல்ல முறையில் இருப்பதாலும், சீரமைக்க தேவையில்லை என்பதாலும் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணாநகர் உள்ளிட்ட மண்டலங்களில் 3200 சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி பொறுப்பேற்றார். இதன் பின்னர், சாலை ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொறியாளர் அடங்கிய குழுவுக்கு அறிவுறுத்தினார்.

ஆணையரின் அறிவுறுத்தல்படி, ஆய்வு செய்த பொறியாளர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. 3200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவற்றை சீரமைப்பதற்கான தேவை தற்போது இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 660 ஒப்பந்தங்களும் உடனடியாக ரத்து செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்தார். அவசர அவசரமாக போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து அடுத்த கட்டமாக சட்டரீதியிலான விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.