இந்தியா

குடும்ப வன்முறையை தடுக்க பிங்க் பாதுகாப்பு திட்டம்… கேரளாவில் விரைவில் அறிமுகம்…

கேரளாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் சைபர் தாக்குதலைத் தடுக்க, கேரள காவல் துறையின்கீழ் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வரதட்சணை கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பல இளம் பெண்களின் இல்லற கனவு முழுமை பெறாமலேயே முடிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக கேரள இளம் பெண்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கேரளாவில் வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் சைபர் தாக்குதலைத் தடுக்க புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

கேரள காவல் துறையின்கீழ் துவக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம், பயிற்சி பெற்ற பெண்கள், வீட்டிற்கு வீடு சென்று குடும்ப வன்முறை தொடர்பாக தகவல்கள் சேகரிக்க உள்ளனர். சேகரிக்கப்பட்ட இந்த தகவல்களை, காவல் துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்த நடைமுறை வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெகவல் தகவல் வெளியாகி உள்ளது.

பாதிக்கப்படும் பெண்களுக்காக கேரள அரசு கொண்டு வந்துள்ள பெண்கள் பிங்க் பாதுகாப்பு திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.