இந்தியா

நீட் தேர்வுக்கும் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ உத்தரவு… பள்ளி கல்வி துறை அறிவுறுத்தல்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 16 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் நாளை வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டவும், அவர்களுக்கு உதவி செய்யவும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒன்றிணைத்து பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 6500 பேர் விண்ணப்பித்து 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர். நீட் தேர்வு விண்ணப்ப படிவத்தில் தவறு ஏற்பட்டு, நிராகரிக்கப்படக் கூடாது என்பதற்காக, அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.