தமிழ்நாடு

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

வணிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு வரும் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.