வீர வசனம் பேசுவதை விட்டு விடுங்கள்..! விலகுபவர்களை தடுக்க முயற்சி செய்யுங்கள்! ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் அதிமுக தலைமைக்கு மீண்டும் அறிவுரை..!
வீர வசனம் பேசுவதை விட்டு விட்டு விலகுபவர்களை தடுக்க முயற்சி செய்யுங்கள் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் அதிமுக தலைமைக்கு மீண்டும் அறிவுரை செய்துள்ளார்
இதுகுறித்து அவர் முகநூல் பக்கத்தில் கூறியதாவது :
எதற்கு இவற்றை உங்களிடம் சொல்கிறேன் என்றால்,
போகிற தலைவர்களை வசைபாடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு தொண்டர்கள் பலர் போய்விட்டனர் என்பது புரிகிறதா? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று வீர வசனம் பேசுவதை விட்டுவிட்டு விலகுபவர்களை தடுக்க முயற்சி செய்யுங்கள். முதலில் துதி பாடுவதை நிறுத்துங்கள்.
புரட்சித் தலைவரைப் பார்த்து வெறிகொண்டு கட்சிக்கு வந்தவர்கள்கூட இன்று வெளியேறிவிடலாமா என்று யோசிக்கும் நிலை வந்திருக்கிறது என்றால் இந்த கட்சியை எப்படி நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள்? நடப்பதை பார்த்தால், போகிறவர்களைப் பார்த்து அப்பாடா… இனி நமக்கு ஒரு எதிரி தொலைந்தான் என்று நீங்கள் நினைப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

அம்மா உங்களிடம் ஒப்படைத்தபோது இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, இப்போது இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்த்தால் கழகத்தின் இன்றைய நிலை புரிந்துவிடும். ஒன்றரை கோடி சப்தமில்லாமல் கரைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிர்வாகியும் உங்கள் உள்மனசை கேட்டு பாருங்கள் அது உண்மையைச் சொல்லும்.
நான் சொல்வதெல்லாம் கட்சியின் நலன் கருதி. இதை சொல்வதால் என்னை எதிரியாகப் பார்க்காமல் இவனாவது உண்மையைச் சொல்கிறானே என்று சிந்தியுங்கள். இந்த நிதர்சனமான கருத்து கழகத்தினரை பாதித்தால் நான் வருந்துகிறேன். நண்பர்களின் கட்சி மாறுதல் எண்ணம் கழகத்திற்கு விடப்பட்டிருக்கும் இறுதி எச்சரிக்கை என்று உணர்ந்தால் நலம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் .
