அரசியல்தமிழ்நாடு

திருப்பதிக்கு இணையாக தமிழக கோயில்கள் மாற்றி அமைக்கப்படும்… அமைச்சர் சேகர்பாபு அதிரடி…

திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் போன்ற தமிழகத்தின் முக்கிய கோயில்கள் அனைத்தும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உறுதிபட கூறினார்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள சிதிலமடைந்த நிலையில் இருக்கும் வாசுதேவ பெருமாள் கோயில் வளாகத்தை, அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உடனிருந்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோயில்களில் வரவு செலவு கணக்கை இணையத்தில் வெளியிடுவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். பேஸ்புக்-ல் வாசுதேவ பெருமாள் கோயில் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தி பரவுவதாக, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி பாண்டியன், எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதனடிப்படையில் வாசுதேவ பெருமாள் கோயிலில இன்று ஆய்வு மேற்கொண்டோம். அடுத்த இரண்டு தினங்களில் கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்படும் என்றார். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக அறநிலையத்துறை கோரிக்கைகளை பதிவிடுங்கள் என்ற இணையதளத்தில் இதுவரை பத்தாயிரத்திற்கம் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அதேபோல் மனுவாக 30 ஆயிரம் கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் கூறினார். கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார்.

இன்னும் ஓராண்டு காலத்தற்குள் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மை மிக்கதாக முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என்றும், திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் போன்ற தமிழகத்தின் முக்கிய கோயில்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு இணையாக மாற்றப்படும் என்றும் கோயில்கள் சீரமைப்பது தொடர்பான கூட்டம் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.