பெண்களின் உடல்வாகு குறித்து பாடங்கள் இடம் பெறுமா? திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம் குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல்…
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளதற்கு நடிகை கஸ்தூரி கிண்டலாய் விமர்சனம்செய்துள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கல்வியியல் பணிகள் கழக தலைவருக்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளதற்கு, பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை, இந்த பதவியில் அமர்த்துவதைவிட அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாது என்றும், தகுதியான ஒருவரை இந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோல், பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நிலையில், தமிழக பாடநூல் நிறுவன தலைவராக ஐ.லியோனி நியமனம் செய்யப்பட்டதற்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில், தமிழக பாடநூல் நிறுவன தலைவராக ஐ லியோனி நியமனம். சபாஷ்… இதைவிட ஒரு அருமையான தேர்வு இருக்க முடியுமா? தமிழக பாடநூல்களில் திமுகவின் வரலாறு, திராவிட கழகத்தின் சமூக பாடங்கள், திரைப்படங்களின் வரிசை, பெண்களின் உடல்வாகு குறித்து பாடங்கள் இடம்பெறும் என்று இனி நாங்கள் எதிர்பார்க்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
