பாலியல் தொந்தரவு அளித்து 6 வயது சிறுமி கொலை… உயிரிழக்கும் முன் தூக்கில் தொங்கவிட்ட காமுகன்….
6 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொலை செய்து தடயத்தை அழிக்க முயன்ற இளைஞரை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியார் அருகே சுரக்களம் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளி கண்ணன் – பிரேமா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் கபில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இரண்டாவது 6 வயது சிறுமி கனிஷ்கா. கடந்த மாதம் 30 ஆம் தேதி கண்ணன்-பிரேமா தேயிலை தோட்டத்திற்கும், அண்ணன் கபில் வெளியே சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.
அமப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை பார்த்த கபில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது தங்கை தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தபோது, சிறுமி கழுத்து இறுகி இறந்திருக்கலாமோ என சந்தேகம் கொண்டனர். இது குறித்து வண்டிப்பெரியாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி கனிஷ்காவின் இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் வண்டிப்பெரியாறு போலீசில் புகார் தெரிவித்தனர். இதனிடையே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் குடியிருந்து வரும் அர்ஜூன் (22) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அர்ஜூன் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று முறையான விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவம் அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், சிறுமி சத்தம் போட்டதால் அவரது வாயை மூடியபோது அவர் மயக்கமடைந்து விட்டதாகவும் அர்ஜூன் கூறியுள்ளார்.
சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து அறையில் இருந்த கயிற்றில் சிறுமியின் கழுத்தை கட்டி தொங்க விட்டு விட்டு பூட்டிய கதவை பூட்டியபடியே, அருகில் இருந்த ஜன்னலை திறந்து வெளிப்புறமாக குதித்து தப்பித்து சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் அர்ஜூன் கூறியுள்ளார்.
இதையடுத்து அர்ஜூனை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
