அரசியல்தமிழ்நாடு

“மக்களைத்தேடி மருத்துவம்”… அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன அதிரடி தகவல்…

இணை நோய் உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மாத்திரைகள் வழங்கும், மக்களைத்தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் துவங்க உள்ளதாக, சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். கொரேனா காலத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற இணை நோய் உள்ளவர்கள் மாத்திரை வாங்குவதற்கு வெளியில் செல்ல சிரமப்படுவதாகவும், அவர்களுக்கென மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதித்த 20 லட்சம் பேர் முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வீடு தேடி சென்று மாத்திரைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் துவங்கி வைக்க உள்ளதாக கூறினார். இணை நோயாளிகளைக் கணக்கெடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மத்திய அரசிடம், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி, எய்ம்ஸ், புதிய மருத்துவ கல்லூரி உள்ளிட்டவைகள் குறித்து வலியுறுத்த உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.