அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்… அறிக்கை வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி ஓ.பி.எஸ்.
தேச நலன் கருதியும் தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்றும், இதனால் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு பாஜகவில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன், எஸ்.ஆர்.சேகர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுவெளியில் இந்த கருத்தை பேசியதால், அதிமுக தலைமை இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் எஸ்.ஆர்.சேகர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளார். பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது என்றும் தேச நலன், தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றார். இதில் எவ்வித மாற்று கருத்திற்கும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன், எஸ்.ஆர்.சேகர் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டதோ என்று கருதப்பட்டது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி தொடரும் என அறிவித்தது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

