அரசியல்தமிழ்நாடு

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்காதது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி…

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, திருவான்மியூரில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், ஆட்சிக்கு வந்து இரண்டே மாதத்தில் திமுக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி கொள்முதல் என அனைத்தையும் துரிதமாக செய்துள்ளது. ஆனால், வாக்சின் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே அதிமுக ஆட்சியாளர்களுக்கு வரவில்லை என குற்றம் சாட்டினார்.

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் எச்.எல்.எல். நிறுவனம் அதிமுக ஆட்சியாளர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை என கேள்வி எழுப்பினார். எச்.எல்.எல். நிறுவனத்துக்கு 700 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என்பது குறித்தும், தயார் நிலையில் வாக்சின் தயாரிக்கிறோம் என்று அவர்கள் அறிவித்த நிலையாவது அதிமுகவினருக்கு தெரியுமா? என்றும் அவர் ஐயம் எழுப்பினார்.

1903 ஆம் ஆண்டு குன்னூரில் தொடங்கப்பட்ட தடுப்பூசி நிறுவனம் பற்றி அதிமுகவினர் அறிந்துள்ளார்களா என்பதும், 137 கோடி ரூபாய் மதிப்பில் அந்நிறுவனத்தை மேம்படுத்தினார்கள் என்பது பற்றி அவர்களுக்கு தெரியுமா என தெரியவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.