இ-பாஸ், இ-பதிவு இனி தேவையில்லை… தமிழக அரசு உத்தரவு…
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12 ஆம் தேதி காலை வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஜூலை 5 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை காற்றோட்ட வசதியுடனும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், அரசியல் கூட்டங்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
