உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர்… 19 வருட சாதனையை முறியடித்த இந்திய வம்சாவளி சிறுவன்…
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அபிமன்யு மிஸ்ரா, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஹங்கேரி தலைநகர் புத்தபிஸ்ட் நகரில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் லியோன் மெண்டோன்கா, அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவனான அபிமன்யு மிஸ்ரா மோதினர்.

இந்த போட்டியில் லியோன் மெண்டோன்கா சிறப்பாக விளையாடினார். ஆனாலும், அபிமன்யு மிஸ்ரா, இந்திய கிராண்ட் மாஸ்டரான லியோன் மெண்டோன்காவை தோற்கடித்தார். இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று அவர் சாதனை புரிந்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த செர்கே கர்ஜாகின், 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதே இதுவரை சாதனையாக இருந்தது. 19 ஆண்டுகளாக அசைக்க முடியாத அவரது சாதனை இருந்து வந்தது. இந்த சாதனையை அபிமன்யு தற்போது முறியடித்துள்ளார்.

தனது சாதனை முறியடிக்கப்பட்டது குறித்து செர்ஜி கார்ஜாகின், மிஸ்ராவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது நிச்சயம் நடந்தே தீரும் என்று எண்ணினேன் என்றும் இந்தியர் ஒருவரால் தனது சாதனை முறியடிக்கப்படும் என்று முன்னரே கணித்ததாகவும் கூறினார். மேலும், அபுமன்யு மிஸ்ரா எதிர்காலத்தில் பெரிய சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார் என்றும் செர்ஜி கார்ஜாகின் வாழ்த்தியுள்ளார்.
