நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்… எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…
கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு தழிழக அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், நீதி கிடைத்திட அயராது போராடும் வழக்கறிஞர் சமுதாயத்தை சார்ந்த பெரும்பான்மையோரின் பொருளாதார நிலை பிரகாசமாக இருப்பது இல்லை. கொரோனா பேரிடர் காலத்தில் கடந்த ஒன்றரை வருடமாக காணொலி வாயிலாகவே விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் அனுபவம் மற்றும் பொருளாதார சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் அதிகம் பாதித்த பிரிவினருக்கு சிறப்பு நிதியுதவி அறிவிப்பை சட்டசபையில் அறிவித்திருதேன் என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் பெரும்பாலான நலத்திட்டங்கள் தன்னால் அறிவிக்க இயலாமல் போய்விட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை உணர்ந்து இதுவரை எந்த நலத்திட்ட உதவிகளையும் அறிவிக்கவில்லை. இளம் வழக்கறிஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்காதது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே வழக்கறிஞர்களுக்கும், குமாஸ்தாக்களுக்கும் உடனடியாக கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கொரோனாவால் பலியான வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்வதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



