“யாரும் ஒன்றியத்துக்குள் என்னை ஒன்ற வைக்க வேண்டாம்”… புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…
புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பதவியேற்பு விழாவில் பின்பற்றப்படும் வழிமுறைதான் தற்போது பின்பற்றப்படுவதாகவும் எங்கும் அதை மாற்றவில்லை என்றும் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதிய அமைச்சரவை கடந்த 27 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது. அமைச்சர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் பதவியேற்பின்போது, ‘இந்திய ஒன்றியத்தின்’ என குறிப்பிட்டு பதவி ஏற்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அது குறித்து தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், பதவியேற்பு விழாவில் உறுதிமொழி ஏற்பது குறித்து பழைய குறிப்புகளையும், உறுதியேற்பு ஆவணங்களையும் அதிகாரிகள் கொடுத்ததாகவும், இந்திய யூனியன் டெரிடரி ஆஃப் புதுச்சேரி என்ற ஆங்கில வார்த்தையை இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி என மொழி பெயர்த்திருந்ததாகவும் கூறினார். இந்திய அரசின் ஆளுகையின்கீழ் இருக்கும் புதுச்சேரி யூனியன் என்பதை குறிக்கும் விதமாக மொழி பெயர்க்கப்பட்டது. சரியாக இருந்தால் அதை அப்படியே வைத்து பதவியேற்பு விழா நடத்த உத்தரவிட்டதாக கூறினார்.

புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பதவி ஏற்பு விழாவில் பின்பற்றப்படும் வழிமுறைதான் என்றும், எங்கும் அதை மாற்றவில்லை என்றார். அதன்படி ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைத்து, தமிழகத்தில அரசியல் செய்வதை, புதுச்சேரிக்கும் கொண்டு வந்து சிலர் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இப்படி பேசுகின்றவர்களுக்கு, ஒன்று அரசியல் சட்டம் தெரியாமல் இருக்க வேண்டும். இல்லை போதுமான அளவுக்கு தமிழ் மொழியில் அறிவு இல்லாமல் இருக்க வேண்டும் என்றார்.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை வம்புக்கு இழுத்து அரசியல் செய்யும் மோசமான கலாச்சாரம் தமிழகத்தில் அதிகமாகி வருவது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி அரசியலுக்குள்ளும் நுழைந்துள்ளதாக கூறினார். உறுதிமொழியில் மத்திய அரசு என பொருள்படும்படி, எந்த வார்த்தையுமே இடம் பெறவில்லை. அப்படியிருக்கும்போது ஒன்றியம் என்ற வார்த்தையை மத்திய அரசோடு ஒப்பிட்டு பதவி ஏற்பு நிகழ்ச்சி பற்றி பேசுவது நிகழ்ச்சியை அவமானப்படுத்துவது போன்றது என்றார்.
தெலங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என மதிப்புமிக்க பொறுப்பில் இருப்பதால் தேவையில்லாத அரசியலுக்குள் நுழைய முடியாது என்றும் அதை தான் விரும்பவில்லை என்றார். யாரும் ஒன்றியத்துக்குள் என்னை ஒன்ற வைக்க வேண்டாம் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
