மட்டனுக்காக மணப்பெண்ணை மாற்றிய மணமகன்…!
திருமணத்தின்போது உறவினர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து போடாததால், ஆத்திரமடைந்த மணமகன், நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த சம்பவம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த ராம்கன்த் பத்ரா என்பவருக்கு கடந்த புதன் அன்று, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ராம்கந்த் பத்ரா, தனது உறவினர்களுடன் ராஜஸ்தான் வந்தபோது அவருக்கு மணமகள் வீட்டார் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருமண சடங்குகள் பின்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ராம்காந்த் உறவினர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.
மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆட்டுக்கறி வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால். ஆட்டுக்கறிக்கு எந்த தயாரிப்பும் செய்யப்படாததால், இரண்டு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராம்கந்த் பத்ரா, தனது உறவினர்களுடன், அங்கிருந்து புறப்பட்டார்.
மணமகளின் குடும்பத்தினர் மனம் மாறும்படி மணமகன் குடும்பத்தாரிடம் மன்றாடிய போதிலும், திருமண விழாவைத் தொடர ராம்கந்த் பத்ரா மறுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். மேலும், திருமணத்தேதி அன்று, நிச்சயிக்கப்பட்ட மணமகளுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணமகன் ராம்காந்த் பத்ரா திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதேபோன்று நடந்த மற்றொரு சம்பவத்தில், மணமகன் கண்ணாடி இல்லாமல் பார்க்க முடியாததால், மணமகள் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்ட சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
