உயரம் வித்தியாசம் கொண்ட ‘காதல் ஜோடி’… பெருமைப்படுத்திய ‘கின்னஸ்’…
உடல் உயரத்தில் அதிக வித்தியாசம் உடைய காதல் ஜோடியை உலக கின்னஸ் பெருமைப்படுத்தி விருது வழங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடானா பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். 33 வயதாகும் இவரது உயரம் 3 அடி 7 அங்குலமாகும்.
தொலைக்காட்சி நடிகரான ஜேம்ஸுக்கு ஷோலி என்கிற மனைவி உள்ளார். ஷோலி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது உயரம் 5 அடி 4 அங்குலமாகும். உயரம் குறைந்த ஜேம்ஸை பார்த்த மாத்திரத்தில் மனதைப் பறிகொடுத்த ஷோலி, கடந்த 2013 ஆம் ஆண்டு இருவர் சம்ததத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார்.

உயரம் வித்தியாசம் பார்க்காமல் காதலித்து, அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து குழந்தையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த காதல் ஜோடி, உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். ஆண் உயரம் குறைவு; பெண் உயரம் அதிகம் என்ற பிரிவில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2 ஆம் தேதி, கின்னஸ் சாதனையில் இடம் பெற்றதற்கான விருது வழங்கப்பட்டது.

தன்னைப்போல் உயரமான ஒருவரே தனக்கு கணவராக வர வேண்டும் என்றுதான் ஷாலி நினைத்திருந்தாராம். ஆனால் ஜேம்ஸுடன் பழகியதில் அவரிடம் மனதை பறிகொடுத்து திருமணம் செய்து கொண்டதாக ஷோலி கூறுகிறார். டிஸ்ப்ளாசியா என்ற மரபணு கோளாறால் ஜேம்ஸின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சி பாதிப்பு அடைந்துள்ளது. உயரம் குறைந்த ஆண்-உயரமான பெண் காதல் ஜோடிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். உயரத்தில் வித்தியாசம் இருந்தாலும் அன்பை பரிமாறிக் கொள்வதில் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லை என்கின்றனர் ஜேம்ஸ்-ஷோலி ஜோடி.
