குற்றம்

கள்ளக்காதல் ஜோடி தற்கொலையால் நிலைகுலைந்த இரண்டு குடும்பங்கள்… குழந்தைகளுடன் கணவன் தவிப்பு… புதுமணப்பெண் கண்ணீர்…!

நாகர்கோவிலில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டதால், மனைவியை இழந்த கணவன் குழந்தைகளுடன் தவித்து வருவது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த சங்கரன் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தேரூர் பஞ்சாயத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரின் மனைவி வித்யா, தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இருவருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் வேலைக்கு அடிக்கடி லீவு போட்டுவிட்டு பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இது குறித்து சுரேஷ்குமாரின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது. சுரேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடும் என்று நினைத்த அவரது குடும்பத்தார், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்குப் பிறகும், சுரேஷ்குமார் வித்யாவுடனான தவறான உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சுரேஷ்குமார் – வித்யா இருவரும் கூடங்குளம் அருகே கணவன் – மனைவி என்று கூறி குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். மனைவி காணாததால் வித்யாவின் கணவர் சுபாஷ், சுசீந்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வித்யாவும் – சுரேஷ் குமாரும் தனிக்குடித்தனம் நடத்தி வருவதை அறிந்து அவர்களிடம் விசாரிப்பதற்காக கூடங்குளம் சென்றனர்.

தங்களைத் தேடி போலீசார் வருவதை அறிந்த சுரேஷ்குமாரும் வித்யாவும், விசாரணைக்கு பயந்து விஷம் குடித்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் வித்யாவும் சுரேஷ்குமாரும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். கள்ளக்காதலால் இரண்டு குடும்பங்கள் நிலைகுலைந்து போயுள்ளது. புதுமணப்பெண்ணான சுரேஷ் குமாரின் மனைவி கண்ணீருடனும், மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளுடன் சுபாஷ் தனிமையில் தவித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.