தமிழ்நாடு

பராமரிப்பு பணிக்காக அறிவித்ததைவிட கூடுதல் நேர மின் தடை… பொதுமக்கள் குற்றச்சாட்டு….

மின் பராமரிப்பு பணிக்காக அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் மின் தடை செய்யப்படுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். அடிக்கடி மின் தடை ஏற்படுவது கண்டனத்திற்கு என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடக்காத காரணத்தால், மின் தடை ஏற்படுவதாகவும், இவை விரைவில் சீர் செய்யப்படும் என்று மின் துறை அமைச்சர் கூறியிருந்தார். மாநிலம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவைகளில் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின் பராமரிப்பு பணி நடைபெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் அறிவித்ததைவிட அதிக நேரம் மின் தடை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மின் தடை ஏற்படுவதால் மாணவர்கள், வேலை செய்வோர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் அறிவித்ததைவிட அதிக நேரம் மின் தடை செய்யப்படவதால் அவதிக்கு ஆளாவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மின் சாதனங்களில் ஒரு பழுது இருக்கும் என்று கருதி பணியை தொடங்கினால், அதில்கூடுதல் பிரச்சனை ஏற்படுவதாகவும் இதனால் திட்மிட்ட காலத்திற்குள் சரி செய்வதில் சிரமம் உள்ளதாகவும் மின் ஊழியர்கள் கூறுகின்றனர். பல இடங்களில் குறிப்பிடப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் பராமரிப்பு பணி நடைபெறுவதாகவும், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணிகள் முடியாததால் பிரச்சனை ஏற்படுவதாகவும் மின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.