மேயாத மான் பட இயக்குனருடன் இணையும் சந்தானம்!
விஜய்யின் மாஸ்டர் படத்தின் கதையை லோகேஷ் கனகராஜுடன் பொன் பார்த்திபன், ரத்னகுமார் ஆகியோர் இணைந்து எழுதினர். இதில் ரத்ன குமார் மேயாத மான், ஆடை படங்களை இயக்கியவர். இவர் அடுத்து சந்தானம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
சந்தானம் நடிப்பில் கடைசியாக பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. கொரோனா பயத்தில் ரசிகர்கள் திரையரங்கை தவிர்த்ததால் பாரிஸ் ஜெயராஜின் வெற்றி சற்று பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும் . எனினும், தயாரித்தவர்கள், திரையிட்டவர்கள் என யாரும் நஷ்டமடையவில்லை.
சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா ஆகிய படங்கள் வெளிவர தயாராக உள்ளன. இது தவிர, சபாபதி என்ற படத்தையும் முடித்துள்ளார் சந்தானம். விரைவில் இந்தப் படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரத்ன குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்ன குமார், மாஸ்டர் படத்தின் கதையிலும் பங்களிப்பு செலுத்தியிருந்தார். அவர் சொன்ன கதைப் பிடித்துப்போக, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம். தற்போது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
