அரசியல்தமிழ்நாடு

கொரோனா குறைந்ததும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்… சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரை…

கொரோனா தொற்று குறைந்த பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. திமுக ஆட்சி அமைத்த பிறகு கூடியுள்ள முதல் சட்டப்பேரவை தொடரில் மரபுபடி ஆளுநர் பன்வாரிலால் உரை நிகழ்த்தினார். அப்போது ஆளுநர் பன்வாரிலால் தமிழிலில் தனது உரையைத் துவக்கினார். 16-வது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, முதல் சட்டசபைக் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார்.

அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது: தமிழ் இனிமையான மொழி; எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்துவோம். உண்மையான கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்த தமிழக அரசு உறுதியாக உள்ளது. முதலமைச்சர் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது மத்திய அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகள் திறக்கப்படும். தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்தவித பாரபட்சம் இன்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் – பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்டையாகக் கொண்டிருக்கும். உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம்.

கொரோனா 2-வது அலைக்கு மத்தியில் பதவியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நோய் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக பாடுபட்டார். தமிழகத்தின் உண்மையான நிதிநிலையை மக்களுக்கு தெரிவிக்க ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்படும். அந்த குழுவில் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழக பேராசிரியரும், நோபல் பரிசு வென்றவருமான எஸ்தர் டஃப்லோ இடம் பெறுவார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்ந்து உரை நிகழ்த்தி வருகிறார்.