அரசியல்தமிழ்நாடு

சிமெண்ட் விலையைக் குறைக்க நடவடிக்கை வேண்டும்… முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் வேண்டுகோள்…

தமிழகத்தில் சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி தமிக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் அதிகரித்துள்ள நிலையில், பொருட்களின் விலையைக் குறைக்கும்படி அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிமெண்ட் விலை அதிகரித்துள்ள நிலையில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும் படி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்து விட்டதாகவும், திமுக ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயாக இருந்தது என்றம் தற்போது 520 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிமெண்ட் விலையைத் தொடர்ந்து கட்டுமானப் பொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்ந்துள்ளன. ஒரு லோடு செங்கல் விலை 18 ஆயிரம் ரூபாயாக முன்பிருந்த நிலையில், இப்போது 24 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துவிட்டது என்றும் ஒரே மாதத்தில் ஒரு லோடு செங்கல் விலை 6 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு யூனிட் எம்.சாண்டின் விலை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது தற்போது 6 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. அதேபோல் கம்பி விலை ஒரு டன் 18 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது 75 ஆயிரமாக உயர்ந்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு சிமெண்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையையும் குறைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்று, எல் முருகன் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.