குற்றம்

18 வயது நிரம்பாத சிறுமியுடன் திருமணம்… தட்டிக்கேட்ட தாயைக் கத்தியால் குத்த முயன்ற மகன்…

திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட தனது தாயை கத்தியால் குத்த முயன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது கணவர் செல்லத்துரை, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். தனது 3 ஆண் பிள்ளைகளை தாய் பாக்கியம் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பாக்கியத்தின் மூத்த மகனான குமார், 18 வயது நிரம்பாத சிறுமியை திரமணம் செய்து கொண்டார். இதற்கு பாக்கியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மகனுக்கும் தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த குமார், தாயையும், தனது இளைய சகோதரன் நாகராஜையும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளான்.

மகனிடம் இருந்து தப்பி வந்த தாய் மற்றும் அவரது இளைய மகன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றார். அப்போது பாக்கியம் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மூத்த மகன் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.