கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு…
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்க செய்யலாமா? என்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
அதிகாரிகளின் பரிந்துரைகளை ஆராய்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இ-பதிவுடன் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
