15 நாட்களே ஆன குழந்தையின் விரலை வெட்டிய நர்ஸ்… பெற்றோர் அதிர்ச்சி…
அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவரின் கவனக்குறைவால் பிறந்த 15 நாட்களே ஆனா குழந்தையின் கட்டை விரல் துண்டாக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேஷ் – பிரியதர்ஷினி தம்பதியர். நிறைமாத கர்ப்பிணியான பிரியதர்ஷினி, தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 15 நாட்களே ஆன குழந்தைக்கு பால் அருந்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால், ஊசி மூலம் திரவ உணவு செலுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் குழந்தை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்து வந்தது.
இதை அடுத்து, தாயும் – சேயும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள். இந்த நிலையில், திரவ உணவுக்காக குழந்தையின் விரலில் இருந்த ஊசியை எடுக்க செவிலியர் ஒருவர் முயன்றுள்ளார். குழந்தையின் கையில் போடப்பட்டுள்ள ஊசியினை, கைகளால் எடுக்காமல், கத்திரிக்கோலில் செவிலியர் எடுத்துள்ளார். அவரது அலட்சிய நடவடிக்கையால், குழந்தையின் கட்டை விரல் துண்டாக்கப்பட்டது. இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் செவிலியரிடம் கேட்டதற்கு, மருத்துவர் வந்த பிறகே சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியுள்ளார். துண்டாக்கப்பட்ட குழந்தையின் கட்டைவிரல் கையுடன் ஒட்டி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அலட்சியமாக நடந்து கொண்ட செவிலியர் மீதும், மருத்துவமனை நிர்வாகத்தினர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
