மருமகளுக்கு எதிராக ‘பயோவார்’… ‘வில்லங்க மாமியாரின்’ தில்லுமுல்லு அம்பலம்…
மருமகளுக்கு எதிராக பயோவார் நடத்தி அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சிர்சிலா மாவட்டம், நெமிலிகுட்டாதண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், காமரெட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, மருமகளுக்கும், மாமியாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெண்ணின் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை வீட்டில், தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. கொரோனா பாதித்த மாமியார் வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில், அவருடன் சமூக விலகளை கடைப்பிடித்து வந்துள்ளார் அந்த பெண். இதைப் பிடிக்காத மாமியார், மருமகளுக்கும் கொரோனாவை பரப்ப வேண்டும் என்ற தீய எண்ணத்துடன், தான் பரிவுடன் இருப்பதுபோல் நடித்து வந்துள்ளார். அவர்களை அவ்வப்போது கட்டிப்பிடித்து அரவணைப்பதுபோல் தனக்கிருக்கும் கொரோனா வைரசை மருமகளுக்கும் குழந்தைக்கும் பரவும்படி செய்துள்ளார். மேலும் இதையே காரணம் காட்டி, மருமகளை, அவர் வீட்டில் இருந்தே துரத்தியிருக்கிறார். தனது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ள அந்த பெண், தன்னை தனிமைப்படுத்திக் கொணடு கொரோனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடரபாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மருமகள் மீது, மாமியார் பயோவார் தாக்குதல் நடத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண்ணின் கணவர் கடந்த 7 மாதங்களாக ஒடிசாவில் பணியாற்றி வரும் நிலையில் இதை சாதகமாக பயன்படுத்தி, மருமகளுக்கு கொடுமைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கொரோனாவை பரப்பி தன்னை வீட்டை விட்டு துரத்தியதாக அந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மாமியார், மருமகளுக்கு கொரோனா பரப்பி வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
