தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் – சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், “இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழு ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூட்டத்தில் அறிவித்துள்ளன.
அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்போவதில்லை எனவும் நிவாரண பணிகளை முழு மனதுடன் செய்வதாகவும் உறுதியளித்துள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது. சில மருத்துவமனைகள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றன. கடைசி நேரத்தில் நோயாளிகளை வெளியேற்றக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.
