மம்தா முதல்வராகும் தகுதியை இழந்துவிட்டார்…திரிபுரா முதல்வர் தாக்கு
நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் அமரும் தகுதியை இழந்து விட்டார்’ என திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் தேவ் குமார் விம்ரசித்துள்ளார்.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 இடங்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்று பெரும் பலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமரவுள்ளது. தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளித்த பா.ஜ.க 77 இடங்களில் வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.
இந்த நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது திரிணாமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.க. தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் பா.ஜ.க தொண்டர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் முதல்வர் பிப்லப் தேவ் குமார் தலைமையில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது.
மேற்குவங்க மாநிலத்தின் பல பகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பா.ஜ.க தொண்டர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியே பொறுப்பேற்க வேண்டும். மேலும் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்து விட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படி முதல்வராக முடியும். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேறு ஒருவரே முதல்வர் பதவியில் அமர வேண்டும். முதல்வர் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை மம்தா பானர்ஜி இழந்து விட்டார் என அவர் கூறினார்.
