கௌரவ விருந்தினராக வங்காளதேசம் செல்லும் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை வங்காளதேசம் செல்கிறார். வங்காளதேசத்தின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கௌரவ விருந்தினராக பங்கேற்கிறார்.
வங்காளதேசம் பயணத்தைப் பற்றி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்;
நாளை நான் இரண்டு நாள் பயணமாக வங்காளதேசத்துக்கு செல்கிறேன். பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கையையும், கொள்கைகளையும் நினைவில் வைத்துக் கொள்ளவும் மற்றும் வங்காளதேசத்தின் 50வது ஆண்டு சுதந்திர தின விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளேன்.
வங்காளதேசதுடனான நமது கூட்டாண்மை, அண்டை நாடுகளுக்கு முதல் உரிமை என்கிற கொள்கையின் முக்கியமான தூணாகும். மேலும், இதனை வலிமையாகவும், பன்முகப்படுத்தவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் வங்காளதேசத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பயணத்திற்கு நாம் தொடர்ந்து ஆதரவளிப்போம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
