எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை… ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். கடும் கண்டனம்…!
முன்னாள் அமைச்சர்கள் மீது தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க அதிமுக தயார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்தது தொடர்பான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்களது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, சென்னை உள்பட 60 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னாள் அமைச்சரின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். ஆதாரம் ஏதும் இன்றி உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது என்றும், அதிமுகவினரை பழிவாங்கம் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்ற சந்தேகமும், வருத்தமும் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பும் வகையில், பொய் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பொய் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில், சோதனை கண்டிக்கத்தக்கவை என்றும் சோதனை அனைத்தையும் தாங்கி நின்று அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும். முன்னாள் அமைச்சர்கள் மீது தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சந்திக்க அதிமுக தயார் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
