அரசியல்

எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை…

சட்டமன்ற விடுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி க்கு சொந்தமான தமிழகம் முழுவதுமுள்ள 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் இருப்பதாகவும் அவரிடம் அங்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது கொடுத்த புகாரில் நீதிமன்ற உத்தரவின்படி முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளும் ஆராயப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2014 – 2018 ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் 460.02 கோடி ரூபாய் ஒப்பந்தங்கள், 2014 – 2018 ஆம் ஆண்டுகளில் கோவை மாநகராட்சியில் 346.81 கோடிக்கு ஒப்பந்தங்கள், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையல், சென்னை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் அறை மற்றும் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், சந்திரசேகரன், ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணியின் உறவினரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை பொறியாளர் நந்தகோபால் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில், எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தப்படும் நிலையில், எம்.எல்.ஏ விடுதி முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர், வழக்கறிஞர்கள், போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்எல்ஏ விடுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பெஞ்சமின் வருகை தந்துள்ளனர்.