அரசியல்தமிழ்நாடு

மதுசூதனனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

மறைந்த அதிமுக அவை தலைவர் மதுசூதனனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் அமைச்சரும் அதிமுக அவை தலைவருமான மதுசூதனன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த மதுசூதனின் உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உடனிருந்தனர். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களும் உடனிருந்தனர்.

மதுசூதனன் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், எம்ஜிஆர் தீவிர விசுவாசியாகவும், சென்னை மாவட்ட செயலாளராகவும், அதிமுகவில் மூத்த முன்னோடியாக இருந்தவர். அவரது இழப்பு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளது. மதுசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான அதிமுகவினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாற்று கட்சியைக் சேர்ந்தவர்களும், மதுசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை, சென்னை, மூலகொத்தளத்தில் உள்ள இடுகாட்டில் 2 மணியளவில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.