“காலணிய கழட்டுனாதான் தடுப்பூசி போட்டுக்குவோம்”… பெண் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில், காலணியுடன் வந்த டாக்டரை ஊர் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தமிழக அரசு சார்பில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ள நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்டம், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பொய்கை கிராமத்தின் முத்தாலம்மன் கோயிலில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, வேலூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டரை ரெஜினா தலைமை தாங்கினார். கோயில கருவறைக்கு முன்பாக போடப்பட்டிருந்த சேரில் டாக்டர் ரெஜினா செருப்பு காலோடு அமர்ந்திருந்தார்.
இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களில் சிலர் டாக்டரை செருப்பைக் கழற்ற வேண்டும் எனவும் அப்போது, தான் தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என்றார்கள். பல்வேறு தரப்பினரும் முகாமிற்கு வந்து செல்வதால் கொரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால், செருப்பை கழற்ற மாட்டேன் என்று கூறியுள்ளார்.
டாக்டர் ரெஜினாவை, அங்கிருந்து வெளியேற்றா விட்டால், தாங்கள் ஊசி போட்டுக்கொள்ள மாட்டோம் என்று ஊர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி இந்து முன்னணி பொறுப்பாளர் ஆதி சிவா, ஆதரவாளர்களுடன் முகாமிற்கு வந்து பெண் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோயிலை அவமதிப்பதற்காக செருப்பு அணிந்து வரவில்லை என்றும், கொரோனா நோய் தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால்தான் செருப்பு அணிந்து வந்திருப்பதாக டாக்டர் ரெஜினா கூறியதை அடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
