தமிழகத்தில் 7, 8 தேதிகளில் கனமழை வாய்ப்பு… சென்னை வானிலை மையம் தகவல்…
தமிழகத்தில் வரும் 7 மற்றும் 8 ஆம் தேதி முதல் கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தென்மேற்கு வடக்கு, மத்திய மேற்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
