மத்திய அரசின் திட்டங்கள் தங்களுடையது என திமுக பொய் பிரச்சாரம்… பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி குற்றச்சாட்டு…
மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் அனைத்தும், திமுக அரசு தங்களுடையது என்று பொய் பிரச்சாரம் செய்வதாக மொடக்குறிச்சி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு பாஜக தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சியும், திமுகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கவில்லை என்றும் 2016 ஆம் ஆண்டு பாஜக வந்தபிறகு, உயர்நீதிமன்றத்தில் வாதாடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவத்தில் 27 சதவிகித இட ஒதுக்கீடு வாங்கித் தந்ததாக கூறினார்.
இதேபோல் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு, மோடி அரசு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும், சமூகத்தில் அனைத்து சலுகைகளும், அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் இதுபோன்ற சட்டத்தை பெற்று தந்துள்ளார் என்றார்.
தற்போது அறிவித்துள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவத்தில் 27 சதவிகித இட ஒதுக்கீடு உட்பட தமிழகத்தல் ஏழை – எளிய மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் அனைத்தும், திமுக அரச
தங்களுடையது என்று பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் மோடி அரசால் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்தியாலேயே மொடக்குறிச்சி தொகுதியில்தான் காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைத்து, குடிநிர் விநியோகம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார். இதனை நன்கு புரிந்து கொண்டதால் இனி தமிழக மக்கள் பாஜக பக்கம்தான் இருப்பார்கள் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தெரிவித்தார்.
