மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பட்ஜெட் அமைய வேண்டும்… அரசு உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்…
மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரக்கூடிய வகையில் நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், துறை ரீதியான பட்ஜெட்டும் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், விவசாயிகள் துறை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பலனளிக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.
விவசாய நிபுணர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, விவசாயம் செழிக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் இடம் பெறும் வகையில் வேளாண் பட்ஜெட் இடம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பொது நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை சிறு-குறு தொழில்கள் சங்க பிரதிநிதிகள், மீனவ சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இடம்பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வழக்கமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதே, வேளாண் துறைக்கும் சேர்த்து தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு பிரத்யேகமாக வேளாண் துறைக்கு நிதிநிலை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
