Uncategorized

கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் தனி கவனம் செலுத்துங்கள்… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா 3-வது அலை வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இதை உறுதிபடுத்தவில்லை. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியது. ஆனால், பொதுமக்கள் கொரோனாவின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமலும், அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காமலும் பொதுவெளியில் தேவையின்றி வந்ததால், கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்கியது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், மே மாதத்தில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, அசாம், மிசோராம், மேகாலயா, ஆந்திரா ஆகிய 10 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில்தான் 10 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த 46 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.