அரசியல்தமிழ்நாடு

“அதிமுகவுக்கு சசிகலா தயவு தேவையில்லை… அவரால்தான் அதிமுக மீளும் என்ற நிலையும் இல்லை”… எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிரடி பேச்சு…!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்த மிகப்பெரிய கட்டமைப்புடன் அதிமுக உள்ளது என்றும் சசிகலாவின் தயவு உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு தேவைப்படாது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை ஆலங்குலம் பகுதியில் அதிமுக கிழக்கு கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிளுடன் விவாதிக்கப்பட்டது.

கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார். மூன்று சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என்றும், குறிப்பாக 46 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்துள்ளதாகவும் கூறினார்.

இதைக் கருத்தில் கொண்டு தொண்டர்கள் தீவிர களப்பணியாற்றி உள்ளாட்சி தேர்தலில அதிமுக வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார். கூட்டணி குறித்து தலைமை கழகம் முடிவே இறுதியானது என்றும், தலைமை அலுவலகத்தின் முடிவை முழுமனதாக ஏற்று தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றி வெற்றி காண்போம் என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்த மிகப்பெரிய கட்டமைப்புடன் அதிமுக உள்ளதென்றும், சசிகலாவின் தயவு உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு தேவைப்படாது என்றும் சசிகலா துணை வந்தால்தான் அதிமுக மீளும் என்ற நிலை இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.