சென்னை புறநகர்களிலும் கடைகள் அடைப்பு… வியாபாரிகள் அதிருப்தி…
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் அங்காடிகள், வணிக வளாகங்கள் செயல்பட இன்று முதல் அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையைப் போன்று சென்னை புறநகர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், இறைச்சிக்கூடம், சண்முகம் சாலை, முத்துரங்கம் சாலை, அப்துல் ரசாக் சாலை உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், நகராட்சி அதிகாரிகள் இரவோடு இரவாக தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் கடைகள் அடைக்கப்பட்டன.
தற்போது ஆடி மாதம் என்பதால், அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழாக்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் அதிகளவில் கடைகளில் சேமிக்கப்பட்டுள்ளன. கடைகள் மூடப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த பொருட்களை வேறு பகுதியில் விற்பனை செய்ய அனுமதிக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், கோயில்களில் வழிபாடு நடுத்துவதற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியாத நிலையில், பொதுமக்களும் இருந்து வருகின்றனர். தாம்பரம் மார்க்கெட்டிற்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
