ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களையுங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு…
ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்து மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக அரசு செய்தி குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிதித்துறையின்கீழ் செயல்படும், துறைகளான கருவூலம் மற்றும் கணக்குகள், ஓய்வூதியம், உள்ளாட்சி நிதி தணிக்கை, கூட்டுறவு தணிக்கை, துறை தணிக்கை மற்றும் நிர்வாக தணிக்கை, அரசு தகவல் தொகுப்பு விபரம் மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் செயல்பாடுகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடைகள், செலவிடப்பட்ட விவரங்கள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டதாகவும், கொரோனா தொற்று தொடர்பான பணிகளுக்கு செலவிடப்பட்ட விவரங்கள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் ஆய்வு நடத்தியதாகவும், அரசின் வரவு செலவு திட்ட நடவடிக்கைகளில் மற்றும் வரவு செலவு திட்டம் தயாரிப்பதில், நவீன வழி முறைகளை கையாளுதல், எளிய மற்றும் பேச்சு வழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு செலவு திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக கேட்டறிந்த முதலமைச்சர், ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தியதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
