இந்தியா

கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை… இன்று பதவியேற்பு…

முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து,கர்நாடகாவின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்க உள்ளார்.

எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், வயது மூப்பின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

கர்நாடக முதலமைச்சராக 4-வது முறையாக எடியூரப்பா பதவியேற்கும்போதே அவருக்கு வயது 75. எழுபத்தைந்து வயதுக்குமேல் கட்சி சார்ந்த பணிகளிலும் ஆலோசனைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்ற கொள்கை கொண்டுள்ள பாஜக, தற்போது அவரை ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா, தெலங்கானா அல்லது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனை, புதுச்சேரியின் நிரந்தர துணை நிலை ஆளுநராக நியமிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எடியூரப்பா ராஜினாமாவைத் தொடர்ந்து கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார்.

பெங்களூருவில் நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இன்று பிற்பகல் 3 மணியளவில் கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்க உள்ளார்.