அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விலக்கு அளிக்க முடியாது… சிறப்பு நீதிமன்றம் காட்டம்…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விலக்கு அளிக்க முடியாது என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அவர் மீது 3 பிரிவுகளின்கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக்கொள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி ஆலிசியா முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில்பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். மற்ற இரண்டு வழக்குகளிலும், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அமைச்சர் செநிதல்பாலாஜி ஆஜராகாவில்லை. மின்துறை சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டங்கள் இருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை என்றும் மற்றொரு தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கும்படி அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதி ஏற்க மறுத்து, நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது என்றார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜி கண்டிப்பாக வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
