தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை மையம் அறிவிப்பு…

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக வரும் வாரங்களில் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 27 ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இதே சூழல் நிலவும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.