சினிமா

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்… திரையுலகினர் அஞ்சலி…

பழம்பெரும் நடிகை ஜெயந்தி, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76.

நீர்க்குமிழி, பாமாவிஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயந்தி. தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 6 மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

நடிகை ஜெயந்தி பல மொழிப் படங்களில் நடித்திருந்தாலும் கன்னட சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர். 1960-களில் தொடங்கி 1980-கள் இறுதி வரையில் கன்னட சினிமாவில் கோலோச்சியவர். அபிநய சாரதா என்று கன்னட ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால், சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தார், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நடிகை ஜெயந்தி உயிரிழந்தார். நடிகை ஜெயந்தி மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.