துப்பாக்கியுடன் செல்ஃபி எடுத்த இளம் பெண் பரிதாப பலி…
செல்ஃபி மோகம் புதுமணப் பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது. துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது, டிரிக்கரில் கைஅழுத்தப்பட்டு, குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ஆகாஷ் குப்தாவின் தந்தை ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார்.
செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் உடைய புதுமண பெண்ணான ராதிகா, வீட்டில் இருந்த துப்பாக்கியைக் கையில் வைத்தபடி செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்திய அவர், டிரிக்கரில் கையை வைத்துக் கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிரிக்கரில் கை அழுத்தியதால் குண்டு வெடித்தது.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ராதிகா சாய்ந்து கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்தவர்கள் கூறினர்.
இது குறித்து ராஜேஷ் குப்தா கூறும்போது, பஞ்சாயத்து தேர்தல் காரணமாக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியை என் மகன் வீட்டுக்கு வாங்கி வந்தார். அப்போது மருமகள் அதைக் கொண்டு செல்ஃபி எடுக்கும்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
ராதிகா துப்பாக்கியுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும், காவல் நிலையத்தில் ராஜேஷ் குப்தா சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில், ராதிகாவின் தந்தை மகளின் மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார். செல்ஃபி மோகத்தால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
