தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறப்பு…

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து நூலகங்களையும் திறக்க பொது நூலக இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.

போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பொது நூலகத் துறையின்கீழ் செயல்படும் நூலகங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான நூலகங்கள் இயங்கி வருகின்றன. கொரோனா இரண்டாம் கட்ட அலை காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோன தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில், 75 நாட்களுக்குப் பிறகு, நூலகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நூலகங்களில் உள்ள நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவைகள் தினந்தோறும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டி தேர்வர்களுக்கு தயாராவோரின் நலனைக் கருத்தில் கொண்டு நூலகங்கள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் வாசகர்கள், நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி கிடையாது என்றும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுடையவர்கள் நூலகங்கள் வர அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும், நூல் அடுக்குகளுக்குள் வாசகர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என நுலக அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வாசகர்கள் திரும்ப தரும் நூல்களை, கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்திய பின்பே அடுக்குகளில் வைக்கவும் நூலகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.