கர்நாடக மனுவை தள்ளுபடி செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்… ஓ.பி.எஸ். வேண்டுகோள்…!
தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்தப்படும் காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு எதிராக, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டிற்குள் நிறைவேற்றப்பட உள்ள நீர்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒபுதல் தரவில்லை என்பதற்காக, வேண்டுமென்றே தங்களுக்கு தொடர்பில்லாத தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் நீர்பாசன திட்டங்களுக்கு தடை கேட்டு கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது நியாயமற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டம், கடலூர் நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் காரணமாக, தமிழ்நாட்டில் வீணாக கடலில் கலக்கும் உபரிநீர், மற்ற பகுதிகளுக்கு திருப்பி விடப்படுமே தவிர, இதில் கர்நாடகாவிற்கு எந்தவித பாதகமும் ஏற்படாது. தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறாமையின் வெளிப்பாடு என்றும், உபரிநீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு பயன்படக் கூடாது என்ற கர்நாடக அரசின் கெடுமதி எண்ணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய கர்நாடக அரசுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும், இந்த மனு முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றம், கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்க்ல செய்துள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்வதற்கு தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
